
இருங்களூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அடிப்படை வசதிகள் வேண்டி மனு
திருச்சி மாவட்டம் இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள், மக்கள் குறைதீர் முகாமின் போது, நேற்று (21-04-2025) திருச்சி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் இருங்களூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் 528 குடியிருப்புகளும், பகுதி இரண்டில் 240 குடியிருப்புகள் என மொத்தம் 768 குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்பில் திருச்சியின் நகரப்பகுதி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள்ளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வசித்து வருகின்றனர் . இந்த குடியிருப்புக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் போர் தண்ணீரால் நிரப்பபட்டு வருகிறது. புழுக்களுடன் வரும் இந்த தண்ணீரை மக்கள் குடிக்க, சமைக்க பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு உடல் நல கேடுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே இங்கிருக்கும் தொட்டிகளை முழுமையாக சுத்தம் செய்திடவும், மேலும் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் வழி காணவேண்டும் என்றும் இந்தப் பகுதியில் இருந்து பெரும்பாலான பொதுமக்கள் பிழைப்புத் தேடி திருச்சி நகர்ப் பகுதிக்கு வரவேண்டி இருப்பதாலும், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது எனவும், இதற்கு போதிய பஸ் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், குப்பைகளை கொட்ட குப்பை தொட்டிகள் ஏதும் இல்லாததால் குப்பைகள் கண்ட, கண்ட இடத்தில் கொட்டி விடுவதால் சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து மேற்படி குறைகளை களைந்து மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- திருச்சி பிரசன்னா