logo

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசும்போது:

"பஹல்காமில் இத்தகைய கொடூரமான தாக்குதல் நடக்கப் போகிறது என்றும், பாகிஸ்தானில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றும் எந்த அரசு அமைப்புக்கும் தெரியாதா?
இது நமது அரசின், புலனாய்வு அமைப்புகளின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? யாராவது ராஜினாமா செய்தார்களா? ஆனால் அவர்கள் கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு யார் பதிலளிப்பார்கள்.
என் அம்மாவின் கண்ணீர் பற்றி அவையில் பேசப்பட்டது. இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். என் அம்மாவின் கணவர், அதாவது எனது தந்தை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது, அவருக்கு வயது 44. இன்று, நான் இந்த சபையில் பஹல்காமில் கொல்லப்பட்ட 26 பேரைப் பற்றி பேசுகிறேன். ஏனென்றால் அவர்களின் வலியை நான் அறிவேன், நான் உணர்கிறேன். நேருவை பற்றி பேசுகிறீர்கள், என் அம்மாவை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் போர் ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள்.
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிப்பிதாக இருந்தது. ஆனால் நமது ராஜதந்திரம் தோல்வி அடைந்துவிட்டதால் இந்த நோக்கம் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் தீவிரவாதத்தை ஒழிப்பதாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த நோக்கத்திற்கு ஒரு அடியாக அமைந்துவிட்டது. நமது பிரதமர் இதற்கு பொறுப்பேற்பாரா, அவருக்கு தைரியம் இருக்கிறதா?
இந்த அரசு எப்போதும் கேள்விகளைத் தவிர்க்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு எல்லாமே அரசியல், பிரசாரம், விளம்பரம்தான். பிரசாரத்தில் அரசு மூழ்கியுள்ளது. அவர்களுக்கு பொதுமக்களை பற்றி கவலையில்லை. தலைமை என்பது வெறும் பெருமையைப் பெறுவது மட்டுமல்ல, பொறுப்பை ஏற்க வேண்டும். நமது நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு போர் திடீரென நிறுத்தப்பட்டு, அமெரிக்க அதிபரால் அறிவிப்பு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இது நமது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை பிரதிபலிக்கிறது.
பஹல்காமில் பலியான 26 பேரும் இந்த நாட்டின் குடிமகன்கள்தான். அவர்களின் குடும்பத்தினருக்கும் உண்மையை அறிய உரிமை உண்டு. போரில் இந்தியா எந்த விமானத்தையும் இழக்கவில்லை என்பதை கூற பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார். பஹல்காமில் பைசரன் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அரசை நம்பித்தான் சென்றார்கள். ஆனால் அங்கு சிப்பாய் கூட பாதுகாப்புக்கு இல்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பு யாருடைய பொறுப்பு? இது பிரதமரின் பொறுப்பு இல்லையா? உள்துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா? பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு இல்லையா? தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பொறுப்பு இல்லையா?
பாதுகாப்பு அமைச்சர் நேற்று ஒரு மணி நேரம் பேசினார். பல விஷயங்களைப் கூறினார். ஆனால் ஏன், எப்படி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பதை அவர் விளக்கவில்லை. முன்னாள் பிரதமரும் எனது பாட்டியுமான இந்திரா காந்தி வெற்றிகரமான ராஜதந்திரத்தின் மூலம் பாகிஸ்தானை பிரித்தார். அதற்காக, அமெரிக்க அதிபர் நிக்சனை எதிர்த்தார். ஆனால் அதற்கான பெருமையை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர் சிறந்த தேசபக்தர்" இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

2
38 views