
2.32 கோடி மதிப்பீட்டில் 9வகுப்பறை பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
கும்மிடிப்பூண்டி,செப்.26. கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2.32கோடி மதிப்பீட்டில் 9 வகுப்பறை பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளத்தில் நடைபெற்ற இந்த பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், நகர செயலாளர் அறிவழகன், சுண்ணாம்புகுளம் ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் உஷா ரவி, பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சேகர் , கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன், திமுக நிர்வாகிகள் காளத்தி, பாஸ்கரன், ராமஜெயம், ஒப்பந்ததாரர் தீர்த்தலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் முதல் கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசிய போது கல்வி துறைக்கு எப்போதும் இல்லாத அளவு தமிழக அரசு அதிக நிதியை ஒதுக்குவதோடு, தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக கல்வி துறையில் திகழும் வகையில் பல நல்ல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றது என்றவர், உரிய காலத்தில் தரமாக பள்ளி கட்டிடத்தை கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்,பள்ளி மேலாண்மை குழுவினர், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.