
ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
பொதுவாக பட்டாவில் தவறுகள் ஏற்பட்டால்,அதனை தாசில்தார் அலுவலகத்தில் சென்று என்ன திருத்தம் தேவையோ அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றிக்கொள்ள முடியும். பட்டாவில் அளவு, பெயர் திருத்தம் போன்றவற்றை உரிய ஆவணங்களை காட்டி மேற்கொள்ள முடியும். ஏனெனில் தவறுகள் என்பது தவிர்க்க முடியாதது.. டைப்பிங் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தான் திருத்தங்களுக்கும் வழிகள் இருக்கிறது. ஆனால் இதற்காக சிலர் மக்களை அலைய வைப்பது மற்றும் லஞ்சம் கேட்பது நடக்கிறது. திருச்சியில் தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் கோபிக்கு சொந்தமான 11 ஆயிரத்து 70 சதுர அடி நிலம் திருச்சி கே.சாத்தனூரில் இருக்கிறது. இந்த நிலத்திற்கான பட்டாவில் உரிமையாளர் பெயர் திருச்சி மாநகராட்சி ஆணையர் என தவறுதலாக டைப்பிங் செய்யப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு தவறுதலாக உள்ளதை மாற்றம் செய்து தனது பெயரை நில உரிமையாளர் ஆவணம் எனப்படும் எஸ்.எல்.ஆரில் பதிவு செய்வதற்காக கோபி திருச்சி வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளராக உள்ள தாசில்தார் அண்ணாதுரை (வயது 50) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது தாசில்தார் அண்ணாதுரை, கணினியில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் செய்த ஏற்பாட்டின்படி ரசாயனம் பவுடர் தடவிய 2 லட்சம் ரூபாய் நோட்டுகளை நேற்று மாலை கோபி, திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் அண்ணாதுரையிடம் கொடுத்தார்.
அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர், அண்ணாதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சப்பணம் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட தாசில்தார் அண்ணாதுரையை போலீசார் திருச்சி துவாக்குடி மலை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கும் சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.